Friday 17 June 2011

புதிய அலைகளின் COURIER அட்டாக்

COURTESY : www.vikatan.com

புதிய அலைகளின் கூரியர் அட்டாக்!
ஜூன் 17,2011

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த முறை பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. தலைவர் பதவிக்கு பாரதிராஜாவும் முரளியும் களத்தில் நிற்க, செயலாளர் பதவிக்கு அமீரும், 'தமிழன்' மஜீதும் போட்டியிடுகிறார்கள். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு உதவி இயக்குநர்கள் ஒருங்கிணைந்து 'புதிய அலைகள்' என்ற பெயரில் வாக்கு சேகரிக்க, களத்தில் இருக்கும் முன்னணி இயக்குநர்களே கலக்கத்தில் தவிக்கிறார்கள்.
பாலமுரளி வர்மன், நாகேந்திரன், ஐந்து கோவிலான், செகதீசன், கமலக்கண்ணன், முகமது அஸ்லம், முருகேசன், பழனி, ராம்சுந்தர், தீபன், தியாகராஜன், விஜய் சங்கர் ஆகியோர் புதிய அலைகள் அணியில் களத்தில் நிற்கிறார்கள்.

புதிய அலைகளின் வாக்குறுதிகள் உதவி இயக்குநர்களுக்கு மிகுதியான நம்பிக்கையை வார்த்திருக்கிறது. சென்னை நகரத்துக்குள் அரசுப் பேருந்தில் இலவச பாஸ், உலக படங்களைப் பற்றிய புத்தகங்களை மொழி பெயர்த்து வெளியிடுதல், உலக சினிமா பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துதல், மருத்துவக் காப்பீடு, அவசரகால கடன் உதவி என உதவி இயக்குநர்களுக்குத் தேவையான ஆக்கப்பூர்வங்களை இயக்குநர்கள் சங்கம் இதுகாலம் வரை யோசித்ததுகூட இல்லை.
'உதவி இயக்குநர்களாகப் பணியாற்றும் எங்களுக்குத்தான் நாங்கள் அனுபவிக்கும் முழு வலியும் புரியும்!' என முழங்கி புதிய அலைகள் பேரணி, பிரசாரம் என பட்டையைக் கிளப்பி வருகிறது.

இதற்கிடையில், "புதிய அலைகள் அணியின் சார்பாகப் போட்டியிடும் சிலர் தேர்தல் விதிகளையே அவமதித்துவிட்டார்கள். ஆறு மாதங்களுக்கு முன்னர் உறுப்பினர் அட்டை பெற்று இருந்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும்.

ஆனால், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உறுப்பினர் அட்டை வாங்கியவர்கள்கூட தேர்தலில் நிற்கிறார்கள். இத்தனை காலம் சங்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் திரிந்த இவர்கள் இப்போது தேர்தலுக்காக மட்டும் களத்தில் குதிப்பது ஏன்?" எனக் கேட்டு தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 
இதுகுறித்துப் 'புதிய அலைகள்' உறுப்பினர்களிடம் கேட்டால், ஆதங்கம் அடங்காமல் குமுறிக் கொட்டுகிறார்கள். "நாங்கள் எத்தனை காலம் உதவி இயக்குநர்களாக இருக்கிறோம் என்பது எல்லோருக்கும் தெரியும். உறுப்பினர் அட்டை கேட்டு நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே விண்ணப்பித்துவிட்டோம்.

ஆனால், இயக்குநர் சங்கம்தான் உறுப்பினர் அட்டை கொடுக்காமல் கடந்த மாதம் வரை இழுத்தடித்தது. யார் மீது தவறு என்பதே தெரியாமல் எங்கள் மீது பழி போடுவது எந்த விதத்தில் நியாயம்? உறுப்பினர் அட்டை வாங்கியதில் தாமதம் எனச் சொல்லி எங்களைப் போட்டியில் இருந்து விலக்கத் துடிப்பவர்கள், உதவி இயக்குநர்கள் விஷயத்தில் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது ஊருக்கே தெரியும்.

சேரன் போன்றவர்கள் சரியாக சம்பளம் கொடுக்காமலும், கடுமையாகத் தாக்கிப் பேசியும் நோகடிப்பதை யாராவது மறுக்க முடியுமா? இயக்குநர்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உதவி இயக்குநர்களும் இந்தத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்!" என்கிறார்கள் ஆவேசமாக.

பெரும்பான்மை வாக்குகள் உதவி இயக்குநர்களுக்கே இருப்பதால் புதிய அலைகளின் பிரசாரம் கடுமையாக எடுபடுகிறது. இதற்கிடையில் பெரும்பான்மை இயக்குநர்களின் புறக்கணிப்பு குறித்தும் உதவி இயக்குநர்களுக்கான விடிவு குறித்தும் வலியுறுத்தி ஓட்டு உரிமை உள்ள ஒவ்வொருவரின் முகவரிக்கும் கூரியர் அனுப்பி இருக்கிறது 'புதிய அலைகள்'!

'நாம் தமிழர்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஆதரவும் புதிய அலைகளுக்குக் கிடைத்திருக்கிறது. அதனால், அமீர் மற்றும் பாரதிராஜா அணியின் சார்பாக செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடும் பல இயக்குநர்கள் பதைப்போடு இருக்கிறார்கள்.

"உதவி இயக்குநர்களிடம் தோற்றால் இமேஜ் என்னாவது?" என யோசிக்கும் இயக்குநர்கள் தங்களது உதவியாளர்கள் மூலமாக பிரசாரத்தைத் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

19-ம் தேதி நடக்க இருக்கும் இயக்குநர் சங்கத் தேர்தல் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கப் போகிறதோ?!

- இரா.சரவணன்

"அவன்-இவன்" ரசிகர்களுடன் " புதிய அலைகள் "